27 Jun
  • By OfERR 1 web
  • Cause in

மீள்குடியமர்வு: இலங்கை அகதிகள் குறித்து புதிய ஒப்பந்தம் ஏற்படுமா?

மீள்குடிமயர்வு மற்றும் உடைமைகள் இடமாற்றத்திற்காக இந்தியா-இலங்கை இடையே புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையில் 1984-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது அகதிகளாக வெளியேறிய மக்கள், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம்புகுந்தனர். 1990 ஆம் ஆண்டில் அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகம். தமிழகத்துக்கு அடைக்கலம் தேடி வந்தவர்களுக்காக 245 முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அந்நாட்டில் சுமுகநிலை திரும்ப ஆரம்பித்த பிறகு, நாடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமானது. இப்போது 107 முகாம்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமாள்புரம், சமூகரெங்கபுரம், கோபாலசமுத்திரம், பாவூர்சத்திரம், செட்டிமேடு, போகநல்லூர், சங்கரன்கோவில், கங்கைகொண்டான், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமாள்புரம், பாகோடு, பழவிளை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர், தாப்பாத்தி, குளத்துள்வாய்ப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் அனுப்பன்குளம், செவ்வலூர், மல்லாங்கிணறு, உள்ளூர்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகாம்கள் உள்ளன. இந்த 4 மாவட்டங்களில் மட்டும் பெண்கள், ஆண்கள், சிறுவர்- சிறுமியர் உள்பட மொத்தம் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இலவச கல்வி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் 2009-இல் போர் நடைபெற்று முடிந்து, ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில் இலங்கை அகதிகளிடையே மீள்குடியமர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலங்கைக்கு மீள்குடியமர்வுக்காக சென்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயர்கல்வியில் சிக்கல்

திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் அகதி ஒருவர் கூறியது: தமிழகத்துக்கு குடிபெயர்ந்து 3 தலைமுறைகளைக் கடந்துவிட்ட பின்பும் இதுவரை குடியுரிமை இல்லாமல் வசித்து வருகிறோம். பட்டம் பயின்றவர்களும் அரசு வேலை பெற முடியாத சூழல் உள்ளது. தமிழகத்தில் மருத்துவத்தில் அகதிகளுக்காக 24 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், அவையும் இப்போது பறிபோய்விட்டது.

தொழில்நுட்பக் கல்வியில் இடம் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதிலும் எந்த நாட்டு குடிமகன் என்பதில் பிரச்னை எழுகிறது. இதனால் பள்ளிக் கல்வியுடன் நிற்க வேண்டிய கட்டாயச்சூழல் ஏற்படுகிறது என்றார்.

சான்றிதழ்களால் சிக்கல்

இதுதொடர்பாக ஈழஎதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிர்வாகி செ.தங்கேஸ்வரன் கூறியது: தமிழகத்தில் 1990 ஆம் ஆண்டில் இருந்து குடியிருந்து வரும் அகதிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு திருமணமாகியுள்ளது. அதில் சுமார் 8 ஆயிரம் திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளன. மீள்குடியமர்வு என்று வரும்போது இலங்கை தூதரகத்தில் பிறப்புச் சான்றிதழை இலங்கை அரசின் பிறப்பு-இறப்பு பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் பதிவு செய்து அதற்கான சான்றிதழைப் பெற வேண்டும். அதற்கு பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள், திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அவசியமாகிறது. அதனைக் கொடுக்க முடியாமல் ஏராளமான அகதிகள் தவித்து வருகிறார்கள். அகதிகளாகத் தப்பி வந்தபோது பலர் தங்களது உடைமைகளை விட்டுவந்தனர். சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை அவர்களால் எடுத்து வர இயலாததால், இப்போது சிக்கலில் தவித்து வருகிறார்கள்.

அகதிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பட்டப் படிப்புகளை முடித்துள்ளார்கள். ஆனால் அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களை இலங்கை அரசு அங்கீகரிப்பதாக உத்தரவாதமளிக்கும் ஒப்பந்தங்கள் இதுவரை இரு நாடுகளிடையே ஏற்படவில்லை. அதனால் இங்கு கல்வி கற்று முடித்தாலும், அந்த நாட்டில் வேலை வாய்ப்பைப் பெற முடியாத நிலை உள்ளது. இன்றைய சூழலில் இருதலைக்கொள்ளி எறும்பாக இலங்கை அகதிகள் தவித்து வருகிறார்கள்.

மீள்குடியமர்வுக்கு இலங்கை சென்றால் தங்களது உடைமைகளைக் கொண்டு செல்ல வேண்டும். இங்கேயே வசித்தால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உள்ளது போன்ற குடியுரிமைச் சலுகைகளை வழங்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் என்றார்.

ஒப்பந்தம் மிகவும் அவசியம்

இதுதொடர்பாக இலங்கை அகதிகளுக்கான தொண்டு நிறுவன நிர்வாகி வேலாயுதன் கூறியது: திட்டமிட்ட மீள்குடியமர்வுக்காக இந்தியா-இலங்கை இடையே புதிய ஒப்பந்தங்களை அரசுகள் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இங்கு கல்வி பயின்றவர்களின் கல்விச் சான்றிதழ்களுக்கு இலங்கையில் அங்கீகாரம் அளிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் உதவியோடு விமானங்களில் பலர் இலங்கை திரும்பி வருகிறார்கள். அவர்கள் சுமார் 30 கிலோ எடையிலான உடைமைகளையே எடுத்துச் செல்ல முடிகிறது. அதனை மாற்றி, இங்கு தாங்கள் வைத்துள்ள அனைத்துப் பொருள்களையும் எடுத்துச் செல்ல வசதியாக தனியாக கப்பல் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

மீள்குடியமர்வுக்காகத் திரும்பிச் செல்வோருக்கு ஓராண்டுக்கு நிவாரண உதவி, வீடு, அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு மனுக்களை அளித்துள்ளோம். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறுவது இரு நாட்டு ஒப்பந்தம் மூலமே சாத்தியம். ஆனால், புதிய ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனை விரைவாகப் பரிசீலித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இலங்கை அகதிகளின் எதிர்பார்ப்பு.

For More Information :

நன்றி தினமனி இனைய நாளிதழ்

http://bit.ly/2u1GOaf